தேசிய கொடியேற்ற ஊராட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவராக இருப்பவர் அமிர்தம். இவரை சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் அழைப்புவிடுத்தார். சிறிது நேரத்தில் தேசிய கொடி ஏற்ற வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அமிர்தம், சாதிய பாகுபாடு காரணமாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வைத்த குற்றச்சாட்டு நாளிதழ்களில் செய்தியாக வெளியானது.
இந்த செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. “சாதிய பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்ற ஊராட்சித் தலைவரை தடுத்தது மனித உரிமை மீறலாகாதா, இந்த விவகாரம் தொடர்பாக ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவர் அமிர்தம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, ஊராட்சி செயலாளர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சாதிய பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆத்துப்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் துணை தலைவர் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஊராட்சி செயலரை இடை நீக்கம் செய்ய பரிந்துரை
திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில், பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா நேற்று கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சித் தலைவர் அமிர்தம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி செயலரான சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்யவும், முன்னாள் ஊராட்சித் தலைவரும், திமுக ஒன்றிய கவுன்சிலருமான கவுரியின் கணவர் ஹரிதாஸை ஆத்துப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யவும் ஆட்சியர் மகேஸ்வரிக்கு கோட்டாட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடிக்கம்பம் அமைத்து, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின்போது, ஊராட்சித் தலைவரை வைத்து கொடியேற்ற நடவடிக்கை எடுக்கவும் கோட்டாட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.