அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்று செல்லூர் ராஜு பற்ற வைத்த வெடி ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் என்று பல அமைச்சர்களையும் திரியைக் கிள்ள வைத்தது.
ஒருவழியாய் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி இந்த பிரச்சினையைத் தற்காலிகமாக அடக்கி வைத்துள்ள நிலையில் அதே மதுரையிலிருந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அடுத்து பட்டாசைக் கொளுத்தி இருக்கிறார். அது தற்போது திருச்சியில் விழுந்து வெடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று உதயகுமாரால் அதிமுகவின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்க போடப்பட்டு, மதுரையின் இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூவால் வழிமொழியப்பட்டு, அந்தப் பகுதி பிரமுகர்கள் மற்றும் மக்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டது திருச்சிதான் அதனால் திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் திருச்சியிலிருந்து உரத்துக் கிளம்பி இருக்கின்றன.
எம்ஜிஆர் இரண்டாவது தலைநகரம் குறித்து அறிவித்த போது அதை எதிர்த்துத் தீவிரமாகக் குரல் கொடுத்தது திமுக. ஆனால், தற்போது அந்தத் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, “இரண்டாவது தலைநகரம் என்றால் அது திருச்சிதான்" என்று அழுத்தம் திருத்தமாகக் குரல் கொடுத்திருக்கிறார்.
இன்று காலை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சிதான் அனைத்திற்கும் மையப்பகுதி. இங்கிருந்து தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விரைவாகச் சென்றுவிட முடியு.ம் நீதி பரிபாலனத்திற்கு ஏற்ற இடம் திருச்சி மட்டுமே. எம்ஜிஆர் விருப்பத்திற்கு மாறாக அதிமுகவினர் தற்போது பேசி வருகின்றனர்" என்று திருச்சியைத் தலைநகராக ஆக்குவதற்கு தனது ஆதரவை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மதுரையைத் தமிழகத்தின், இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற மதுரை அமைச்சர்களின் வலியுறுத்தலுக்கு, தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
'திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்' என்று போராடுவதற்காக, வணிகர்கள் மற்றும் பொதுமக்களைக் கூட்டி விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாக, கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு இன்று திருச்சியில் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், “தலைநகர் விஷயத்தில் அதிமுக அமைச்சர்கள் தெரியாமல் பேசுகிறார்கள்” என்கிறார் ‘தலைநகர் திருச்சி’ என்ற இயக்கத்தை நடத்திவரும் ஜவகர் ஆறுமுகம்.
"தமிழகத்தின் தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவு. அது இயலாமல் போய்விட்டது. ஆனாலும் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு திருச்சிக்குத் தலைநகர் பிரச்சினையை நாங்கள் எழுப்பி வந்தோம். 28. 09. 2001-ல் இதனை வலியுறுத்தி திருச்சியில் ஒரு கருத்தரங்கை நடத்தினோம். மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.எஸ்.உதயமூர்த்தி இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று தமிழகத்தின் தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார் .
அதற்குப் பிறகும் பலமுறை இதற்கான கூட்டங்கள் நடந்தன. சென்னை தக்கர்பாபா வித்யாலயா அரங்கிலும் இது தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதில் கவிஞர் மு. மேத்தா, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் பங்கேற்று ஆதரித்தனர். மதுரை, நெல்லையிலும் கூட இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. திருச்சியைத் தலைநகராக ஆக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகவே, ‘தமிழ்நாடு மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம் போராடிக்கொண்டிருந்த நாங்கள் தற்போது ‘தலைநகர் திருச்சி’ என்ற பெயரில் இயக்கம் நடத்தி வருகிறோம். முறைப்படி பதிவு பெற்ற இயக்கம் இது.
இந்தச் சூழலில் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் இருவர் கூறியுள்ளனர். இது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் விருப்பம் என்றும் பொய் சொல்கிறார்கள். அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மட்டும் எம்ஜிஆர் ரகசியமாகச் சொல்லி இருப்பாரோ என்னவோ தெரியவில்லை.
செல்வாக்கை இழந்துவிட்ட அவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள இப்படிப் பேசுகிறார்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு முதல்வர் இரண்டாம் தலைநகராக மதுரையை ஆக்கும் பணியைச் செய்யக் கூடாது. தலைநகர் திருச்சிக்கு மாறியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அப்படி இல்லாத பட்சத்தில் இரண்டாம் தலைநகராகத் திருச்சியைத்தான் அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்றார் ஜவஹர் ஆறுமுகம்.
திருச்சியில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!