தமிழகம்

பெரியாறு அணையில் கூடுதல் நீர் திறப்பால் அணைமட்டம் குறைந்து விவசாயம் பாதிக்க வாய்ப்பு: விவசாயிகள் கருத்து

என்.கணேஷ்ராஜ்

பெரியாறு அணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணைமட்டம் குறைந்து அடுத்தடுத்த மாதத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீரின் அளவை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14ஆயிரத்து 707ஏக்கர் அளவில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அணைநீர்மட்டமும் 136அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த வாரம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. இதில் பாசனத்திற்கு விநாடிக்கு 200கனஅடியும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100கனஅடியும் வெளியேற்றப்பட்டது.

ஆனால் நிர்ணயித்த அளவை விட அணையில் இருந்து தினமும் விநாடிக்கு 2160கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தற்போது அணைப்பகுதியில் மழை குறைந்துள்ள நிலையில் அதிகப்படியான தண்ணீரை திறந்து விடுவதால் அடுத்தடுத்த மாதங்களில் நீர்மட்டம் வெகுவாய் குறைய உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐந்து மாவட்ட பெரியாறுவைகை பாசனநீர்விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறுகையில், தற்போது தென்மேற்கு பருவமழை குறையத் துவங்கி உள்ளது. இந்நிலையில் கூடுதல் தண்ணீரை அணையில் இருந்து வெளியேற்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பற்றாக்குறை ஏற்படும்.

முல்லைப்பெரியாறு அணை மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் உள்ள வயிரவன் ஆறு அணை, சுருளிஅருவி, சுரங்கனாறு, வரட்டாறு, கொட்டகுடி ஆறு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் நீர் வைகைஅணைக்குச் சென்று கொண்டிருக்கிறது. எனவே பொதுப்பணித்துறையினர் பெரியாறு அணை நீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும்.

பெரியாறுஅணையில் 104அடிக்கு மேல் நீர் இருந்தால்தான் தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே தண்ணீரை நிர்ணயித்த அளவு மட்டும் வெளியேற்றி அடுத்த மாதத்திற்கு அணையில் நீரை சேமிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT