ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வந்ததை தொடர்ந்து கோவில்பட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த பேரணியின்போது, காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் சில நாட்களில் உயிரிழந்தனர். இதற்கிடையே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 2018-ம் ஆண்டு மே 28-ம் தேதி தமிழக அரசு மூட உத்தரவிட்டது.
இதையடுத்து 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை உத்தரவு தொடரும்.
ஆலை திறக்க அனுமதி இல்லை என தீர்ப்பளித்த நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனை வரவேற்று கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், தீர்ப்பை வரவேற்றும் கோஷங்கள் முழங்கினர். இதில், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், மாவட்ட செயலாளர் கதிரேசன், மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.