மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து அந்தக்குழுவில் தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக, திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடந்தது,
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. இட ஒதுக்கீடு வழங்காததால் 2,700 -க்கும் மேற்பட்ட ஓபிசி தமிழக மாணவர்கள் இடம் பறிபோனது”. என்ற வாதம் வைக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில் “தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறை இருக்கும்போது மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில்தான் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரியான மக்கள்தொகையின் அடிப்படையில் 50% என்ற இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. பட்டியலின, பழங்குடியினப் பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது" என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் ஜூலை இறுதியில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, தீர்ப்பில், “இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற மருத்துவக் கவுன்சிலின் விளக்கத்தை ஏற்கமுடியாது, முப்பது ஆண்டுகள் முன்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய அரசு இட ஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வர முடியும்.
மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களைப் பெற்றபோது அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத மருத்துவக் கவுன்சில் மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை.
மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இட ஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத கல்வி நிறுவனங்களில் 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், எவ்விதச் சட்டத்தையும் உருவாக்கவில்லை.
இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் 3 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இதன் முடிவை அடுத்த கல்வியாண்டு முதல் அமல் படுத்தவேண்டும்”. என உத்தரவிடப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவ படிப்புக்காக அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் 50% தமிழக ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரியது தொடர்பான இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட உள்ள குழுவுக்கு தமிழக அரசு சார்பில் "தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின்" நிர்வாக இயக்குனர் உமாநாத்தை நியமித்து தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத் மிகுந்த அனுபவம் கொண்டவர்.