முக்கொம்பு மேலணையில் இருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுகிறார் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. 
தமிழகம்

புள்ளம்பாடி, அரியலூர் மாவட்ட பாசனத்துக்காக முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் திறப்பு; 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்; ஆட்சியர் தகவல்

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்ட பாசனத்துக்காக திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அணையில் இருந்து இன்று (ஆக.18) தண்ணீரைத் திறந்துவைத்து, பாய்ந்தோடிய தண்ணீரின் மீது மலர்களைத் தூவினார். தொடர்ந்து, அவர் கூறியதாவது:

"முதல்வரின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்ட பாசனத்துக்காக முக்கொம்பு மேலணையில் இருந்து வாத்தலை பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

விநாடிக்கு 500 கன அடி வீதம் டிச.31-ம் தேதி வரை 136 நாட்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்தத் தண்ணீர் மூலம் நேரடியாக 8,831 ஏக்கர், ஏரி மற்றும் குளங்கள் நிரம்புவதன் மூலம் 13 ஆயிரத்து 283 ஏக்கர் என மொத்தம் 22 ஆயிரத்து 114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

குறிப்பாக, புள்ளம்பாடி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திருச்சி மாவட்டத்தில் 3 ஏரிகளும், அரியலூர் மாவட்டத்தில் 25 ஏரிகளும் தண்ணீர் வசதி பெறும்.

வாத்தலையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுக்கிரன் ஏரி வரை 100 கிமீ தொலைவு வரை இந்தத் தண்ணீர் சென்று பாசன வசதி அளிக்கிறது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய மேலணை கட்டுமானப் பணிகள் ஆய்வு

அதைத்தொடர்ந்து, உடைந்த மேலணைக்குப் பதிலாக புதிய மேலணை கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

முக்கொம்பில் உடைந்த மேலணைக்குப் பதிலாக புதிய மேலணை கட்டும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு.

இந்த நிகழ்வுகளின்போது பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டச் செயற்பொறியாளர் பாஸ்கர், உதவிச் செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT