சென்னை பெருமாநகர காவல் எல்லைக்குள் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து, மற்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், இங்கு மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு அறிவிப்பின்படி, இன்று (ஆக.18) சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"சென்னை பெரு மாநகரக் காவல் எல்லைக்குள் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு திறந்துள்ளது. மக்கள் அடர்த்தி மிகுந்த சென்னை பெருமாநகர பகுதியில் தற்போது வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
ஏற்கெனவே கோயம்பேடு சந்தையை காலத்தில் மூடத் தவறியதால் நோய் தொற்று தீவிரமாக பரவியது போல், மதுக்கடைகளை திறந்ததால் விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னை பெருமாநகர காவல் எல்லைக்குள் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.