தமிழகம்

தூத்துக்குடி நாட்டு வெடிகுண்டு சம்பவம்; நடந்தது என்ன?- எஸ்.பி., ஜெயக்குமார் விளக்கம்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் முறப்பநாடு அருகே ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பார் எஸ்.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:

கொலை சதித் திட்டத்துடன் பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. துரைமுத்து என்ற ரவுடியை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான சிறப்புப் படை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கெனவே 2 கொலைகள் செய்து தலைமறைவாக இருந்த ரவுடி துரைமுத்து முறப்பநாடு அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக சிறப்புப் படைக்கு தகவல் வந்துள்ளது. மேலும் ஒரு கொலைக்கு அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், 5 பேர் கொண்ட காவலர் குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளது. போலீஸார் நடமாட்டத்தை அறிந்து கொண்ட அந்த ரவுடி தப்பியோட முயன்றுள்ளார். ரவுடி துரை முத்து முதலில் ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசியுள்ளார். இரண்டாவதாக வீசிய நாட்டு வெடிகுண்டு காவலர் சுப்ரமணியன் தலையில் விழுந்துள்ளது. இதில் காவலர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரவுடி துரைமுத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். ஆனால், எஸ்.பி. பேட்டியளித்த சில நிமிடங்களிலேயே பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ரவுடி துரைமுத்துவும் இறந்தார்.

துரௌமுத்து மீது ஏரல், பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டத்தில் சாதி ரீதியாக நடந்த இரட்டைக் கொலையில் அவர் தேடப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT