சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே அவரது பிறந்த நாளில் எங்களது பிரதான வேண்டுதல் என்று அமமுகவினர் கருத்து தெரிவித்தனர்.
அமமுக சார்பில் திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.18) சசிகலா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் தில்லைநகரில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கூரில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களில் 100 பேருக்குக் காய்கனிகள், அரிசி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கட்சி நிர்வாகிகள் ராமலிங்கம், கே.ஆனந்தராஜ், எஸ்.அழகர்சாமி, எம்.திரிசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பாலக்கரையில் உள்ள துர்கையம்மன் கோயிலில் அமமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல், கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.மனோகரன் தலைமையில் நேற்று மணப்பாறை முனியப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், வையம்பட்டி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், தேவராட்டம் கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, இன்று குழுமணி சிவன் கோயிலில் சிவன் மற்றும் அம்மன் சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் துளசிசேகரன், மதிவாணன், செங்குட்டுவன், வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அமமுக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரும், 'சின்னம்மா பேரவை' நிறுவன தலைவருமான ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கன்டோன்மென்ட் முடுக்குத் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சசிகலா பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து அமமுகவினர் கூறும்போது, "சசிகலா பிறந்த நாளையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். குறிப்பாக, அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் பிரதான வேண்டுதல்" என்றனர்.