அதிமுகவிலிருந்து முக்கிய மருத்துவப் புள்ளிகள் வெளியேறும் வாரம் இது போல. முன்னாள் அமைச்சரும் மருத்துவருமான விஜய் அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைத்துக் கொண்ட நிலையில் இன்று விழுப்புரம் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் லட்சுமணன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திற்கே செயலாளராக இருந்த லட்சுமணனுக்கு தற்போதுள்ள விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துக்கூட மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாதது தான் அவரது வேதனைக்கும் விலகலுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவைப் பொறுத்தவரை முன்னாள் எம்.பி. ஹீராசந்த், முன்னாள் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆளுமைமிக்க மாவட்டச் செயலாளராக தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் இருந்து வந்தார். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழக அமைச்சராக இருந்த சண்முகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஆக இருந்த மருத்துவர் லட்சுமணனுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் லட்சுமணனுக்கு வழங்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அப்போது லட்சுமணன் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். தன்னைச் சந்தித்து சிபாரிசு கேட்கும் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவினார். பழைய கட்சிக்காரர்களைத் தேடிச் சென்று பார்த்து, தனது ஆதரவாளர்களாக மாற்றிக்கொண்டார். அதனால் அவரது செல்வாக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் அதிகமானது. இது இப்பகுதியில் அசைக்க முடியாதவராக இருந்த சி.வி சண்முகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் மாவட்டச் செயலாளராகவே தொடர்ந்த லட்சுமணனின் கட்சிப் பதவியைக் கடந்த ஓராண்டிற்கு முன்பாக சமயம் பார்த்து காலி செய்தார் சி.வி.சண்முகம். கழக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோரால் லட்சுமணனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் சண்முகத்திடமே மீண்டும் வழங்கப்பட்டது. சண்முகத்திடம் இருந்த மாநில அமைப்புச் செயலாளர் பதவி லட்சுமணனுக்கு வழங்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் கட்சி நிகழ்ச்சிகளில் கூட தலைகாட்டாமல் ஓராண்டிற்கும் மேலாக லட்சுமணன் ஒதுங்கியே இருந்து வந்தார். அண்மையில் மீண்டும் மாவட்டங்களைப் பிரித்து மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று அதிமுகவில் நியமிக்கப்பட்டனர். அதில் விழுப்புரத்தினை இரண்டாகப் பிரித்தபோது தனக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி கிடைக்கும் என அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.
மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் சண்முகம் வேண்டுமென்கிற மூன்று தொகுதிகளை எடுத்துக் கொள்ளட்டும், மீதமுள்ள 3 தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டம் பிரித்து அதில் எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கினால் போதும் என்று தலைமையிடம் வலியுறுத்தி இருந்தார் லட்சுமணன்.
மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து லட்சுமணனை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்வதற்கு முயற்சி நடந்தபோது, அமைச்சர் சண்முகம் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க முடியாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். இது லட்சுமணனுக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது.
சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியபோது மாவட்டச் செயலாளர் நிலையிலிருந்து முதலில் ஓபிஎஸ்ஸை ஆதரித்தவர் லட்சுமணன்தான். அதே ஓபிஎஸ், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தன்னைத் தூக்கிய போதும் காப்பாற்றவில்லை, இப்போது எல்லா மாவட்டங்களும் பிரிக்கப்படும்போது விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து தனக்கு மாவட்ட ச்செயலாளர் பதவியும் வாங்கித் தரவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார் லட்சுமணன்.
இவரது இந்த அதிருப்தியை மோப்பம் பிடித்த திமுக பலவிதமாக இவரிடம் தூது விட்டது. ஒரு கட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இனியும் அமைச்சர் சண்முகத்தை எதிர்த்து அதிமுகவில் அரசியல் செய்ய முடியாது என்பதனை உணர்ந்து கொண்ட லட்சுமணன், திமுகவிற்கு பச்சைக் கொடி காட்டினார். ஸ்டாலினுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு அங்கு பச்சைக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொன்முடியிடம் பேசுங்கள் என்று ஸ்டாலின் சொல்ல அவரிடமும் பேசினார். அதன்பின் இணையும் நாள் குறிக்கப்பட்டது. அதன்படி தன்னுடைய முக்கிய ஆதரவாளர்கள் 10 பேருடன் சென்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் லட்சுமணன். ஊரடங்கு முடிந்த பின் வேறொரு நாளில் விழுப்புரத்தில் நடைபெறும் மாபெரும் விழாவில் தனது ஆதரவாளர்களுடன் முறைப்படி இணைப்பு விழா நடத்த இருக்கிறார் லட்சுமணன்.
அமைச்சர் சிவி.சண்முகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் திமுகவுக்கு வந்திருக்கும் லட்சுமணன் இங்குள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியைச் சமாளிப்பாரா என்ற நமது கேள்விக்கு "அவர் மிகவும் அமைதியானவர். எந்தவிதமான ஆடம்பரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் விரும்பாதவர். அதனால்தான் இவர் வருகிறார் என்றதும் பொன்முடி உடனே ஒத்துக் கொண்டார். இவரும் பொன்முடியுடன் அனுசரித்து நடந்து கொள்வார். இவரது வருகை, விழுப்புரம் மாவட்ட திமுகவிற்குக் கூடுதல் பலம்தான்" என்று பதில் கிடைக்கிறது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த லட்சுமணன் "எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக ஆக்குவதுதான் எங்களுடைய முக்கியமான முதல் பணி" என்று தெரிவித்துள்ளார்.