தமிழகம்

கரோனா தொற்று: காங். எம்.பி. வசந்த குமார் குடும்பத்தினரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் குடும்பத்தினரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனின் தம்பியும், தெலங்கானா ஆளுனர் தமிழிசையின் சித்தப்பாவுமான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார் (70) கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

கரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அவரது மனைவி இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வசந்தகுமார் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். வசந்தகுமார் பூரண குணமடையவேண்டும் என தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு :

“கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான, அன்புச் சகோதரர் வசந்தகுமார் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய புதல்வர் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் விசாரித்தறிந்தேன்.

வசந்தகுமார் எம்.பி. அவர்கள் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT