தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் முருகனின் ஜாமீன் மனு 3-வது முறையாக ஒத்திவைப்பு

கி.மகாராஜன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முருகனின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கரோனா தாக்கியதால் உயிரிழந்தார்.

வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் முருகன் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக கடந்த 6-ம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் மனு மீதான விசாரணை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் 12ம் தேதி மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றைய தேதிக்கு (ஆக.18) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மனு மீதான விசாரணை நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் பொழுது காவலர் முருகன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வாதம் நடத்தினர்.

அப்போது முருகன் ஜாமீன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வர உள்ள நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முருகனின் ஜாமீன் மனு இதுவரை 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT