வைகை ஆற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் இரா.அண்ணாதுரை (மதுரை தெற்கு) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் என்.டி.வெங்கடாச்சலம் பேசியதாவது:
வைகை ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் எதுவும் வெளியேற்றப்படுவதில்லை. அன்றாட கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்குமாறு மதுரை மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார். வைகை கிருதுமால் நதியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகை ஆற்றை மாசுபடுத்திய சில தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்திய பிறகே அந்த தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வைகை ஆற்றில் கழிவு நீர் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டால் அந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.