உறையூரில் எம்ஜிஆர் தங்குவதற்காக வாங்கப்பட்ட பங்களா. படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

அதிமுக அமைச்சர்களின் 2-வது தலைநகர் கருத்தால் திருச்சி மாவட்ட மக்கள் அதிர்ச்சி, அதிமுகவினர் அதிருப்தி

ஜெ.ஞானசேகர்

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதால் ஏற்படும் அலைச்சல், பண விரயம், போக்குவரத்து சிக்கல் உட்பட மக்களின் பல்வேறு சிரமங்களைக் களையும் வகையில் திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க முதல்வராக இருந்த எம்ஜிஆர் முடிவு செய்தார்.

அதன் தொடக்கமாக திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் 1,000 ஏக்கரில் துணை நகரத்தை 1984 செப்.15-ம் தேதி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தொடக்கி வைத்தார். மேலும், திருச்சியில் தங்கிப் பணியாற்றும் வகையில் உறையூரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் எம்ஜிஆருக்கென பங்களாவும் வாங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் எம்ஜிஆரின் கனவு நிறைவேறவில்லை.

இந்நிலையில், மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் தெரிவித்த கருத்துகளால், திருச்சி 2-வது தலைநகராகும் என பல ஆண்டுகளாக காத்திருக்கும் திருச்சி மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரே கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் கூறியது: திருச்சிதான் தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தண்ணீர் வசதி ஆகியவை நிரம்ப உள்ளன. எனவேதான், திருச்சியை 2-வது தலைநகராக்க எம்ஜிஆர் திட்டமிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால், தங்கள் தொகுதி மக்களைக் கவர்வதற்காகவே இரு அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளனர் என்றனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கூறியது:

மாநிலத்தின் மத்திய பகுதியில் தலைநகரம் அமைந்தால் அனைத்து மாவட்ட மக்களும் வந்து செல்ல எளிதாக இருக்கும் என்று கருதித்தான் பூகோள ரீதியாக தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க எம்ஜிஆர் நடவடிக்கை எடுத்தார்.

மதுரைதான் 2-வது தலைநகராக்க பொருத்தமான இடம் என்று கருதினால், விவரம் தெரியாமல் திருச்சி 2-வது தலைநகரம் என்ற திட்டத்தை எம்ஜிஆர் தொடக்கினாரா என்று அமைச்சர்கள் இருவரும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் கூறியபோது, “திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க வேண்டும் என்ற திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட கால விருப்பத்தை மனநிலையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு முறையாக எடுத்துச் செல்வோம்” என்றார்.

இதுதொடர்பாக அமைச்சர் என்.நடராஜன் கூறும்போது, “இந்த விஷயத்தில் கட்சித் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படுவேன். என்னைப் பொறுத்தவரை, நோ கமெண்ட்ஸ்” என்றார்.

SCROLL FOR NEXT