பாஜக உள்ளிட இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்துதீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகமத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள், குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, ஏபிவிபி ஆகியவற்றின் தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அந்த பட்டியலில் இருப்பதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையங்கள், விமானப் படைகள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சோதனை, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமான நபர்களை பிடித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சில இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர். மாநிலஎல்லைகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும்காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.