தமிழகம்

ராஜீவ்காந்தி பிறந்தநாளான ஆக.20-ல் திருப்பூரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

செய்திப்பிரிவு

ராஜீவ்காந்தி பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி திருப்பூரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி நேற்று மேலும் கூறியதாவது:

முதல்கட்டமாக, காங்கிரஸ் நிர்வாகிகள் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள். பின்னர் தொகுதி அளவில் கூட்டங்கள் நடைபெறும்.

தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ராகுல்காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் முடிவு செய்வார்கள். திமுக கூட்டணிவலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது.

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. கரோனாவை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று முதல்வர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னையில் கரோனா பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படாத நிலையிஸ் டாஸ்மாக் கடைகளை திறப்பது கண்டனத்துக்குரியது.

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சமதர்மத்துக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT