பொள்ளாச்சியில் நிலக்கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளி 
தமிழகம்

நிலக்கடலை அறுவடை நேரத்தில் பருவமழை: பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் பாதிப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை நேரத்தில் பருவமழை பெய்ததால், பயிர்கள் அழுகி உரிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புரவிப்பாளையம், வடக்கிப்பாளையம், சூலக்கல், சேர்வைக்காரன்பாளையம், கோட்டூர், ஆனைமலை, சேத்துமடை, அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் ஆண்டுதோறும் வைகாசி பட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர். 90 நாட்கள் பயிரான நிலக்கடலையை கடந்த வைகாசி மாதத்தில் பயிரிட்டனர். இந்த முறை உரிய நேரத்தில் பருவமழை பெய்யாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் அறுவடை நேரத்தில் பெய்த பருவமழையால் நிலக்கடலை வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகின.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘சராசரி விளைச்சல் உள்ள காலங்களில் ஓர் ஏக்கருக்கு ஒரு டன் நிலக்கடலை அறுவடை செய்யப்படும். ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை விலை கிடைத்தது. தற்போது சரியான விளைச்சல் இல்லாததால் ஏக்கருக்கு 500 கிலோ வரை மட்டுமே கிடைத்துள்ளது. நிலக்கடலை பருப்பும் அளவில் சிறிதாக இருப்பதால் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரைதான் கிடைக்கிறது. ஓர் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை வருவாய் கிடைத்த நிலை மாறி, தற்போது ரூ.20 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் உழவு பணி, விதைப்பு, களை எடுப்பு உள்ளிட்ட செலவுகளால் உரிய லாபம் கிடைக்கவில்லை’’ என்றனர்.

SCROLL FOR NEXT