தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற 969 உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் குழு விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தென்னரசு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
கடலூர், வேலூரில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். புத்தகத்தை பார்த்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. எனவே மார்ச் மாதம் வெளியிடப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கைக்காக பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சுரேஷ்குமுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், 969 சார்பு ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் வேலூர், கடலூர், நெல்லையில் ஒரே மையங்களில் படித்தவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க அனுமதித்து, அடுத்தடுத்து பதிவு எண் வழங்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்படவில்லை. திட்டமிட்டே முறைகேடு நடத்தப்பட்டுள்ளது என்றார்.
அரசு சார்பில் முறைகேடு நடைபெறவில்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர்கள் முறைகேடு தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை விசாரிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும். விசாரணையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் மறுதேர்வு நடத்த வேண்டும். இல்லாவி்ட்டால் நியமன முறைகளை தொடரலாம் என நீதிபதி உத்தரவிட்டார்