மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், முதல்முறையாக இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.
திருப்பரங்குன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம். ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி வி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்தியன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்டக் அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்பலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் இளைஞர்கள், அந்தத் தேர்வுக்கு உதவியாக அதிமுக அரசு வழங்கிய இலவச லேப்டாப் உதவியாக இருந்ததாக பெருமிதம் கொள்கின்றனர்.
அந்தளவுக்கு அடித்தட்டு மாணவர்களும் உயர் பதவியில் அமருவதற்கு அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் துணையாக நிற்கின்றன. அதனால், இளைஞர்கள் அதிளவு தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். அந்த வாக்குகளை கட்சியில் இளைஞர்களை கொண்டு ஈர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.