கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநரிடம் புகார் அளிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
''திருச்சி மாவட்டத்தில் தற்போது 900 பேர் மட்டுமே கரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாடு அளவில் கரோனா நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 8.5 சதவீதமாக உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் 5.96 சதவீதமாகவே உள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவான உறுதி செய்யப்படும் மாவட்டங்களில் அதை மேலும் குறைப்பதற்கும், நோய்த் தொற்று விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி, தேனி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதைக் கட்டுப்படுத்தவும் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சை மட்டுமின்றி அனைத்து நோய்களுக்கும் தனிக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் நன்றாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேலும் விரிவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன். நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 38 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில்தான் 85 சதவீத சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே 2 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 மருத்துவமனைகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து மாநில அளவில் 104 என்ற எண்ணுக்கோ அல்லது மருத்துவ சேவைக் கழக இயக்குநரிடமோ புகார் அளிக்கலாம். மாவட்ட அளவில் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநரிடம் புகார் அளிக்கலாம்''.
இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் சுகாதாரத் துறையினர், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.