பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களுக்கு டிஜிட்டல் பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்கள் வழங்கப்படுகிறது என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் கரோனா தொற்று பரிசோதனைகள் சராசரியாக 12,000 முதல் 14,000 வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வைரஸ் தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கோ அல்லது கரோனா பாதுகாப்பு மையங்களுக்கோ அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமை படுத்தப்படுகின்றனர். இதனால் தொற்று பரவுதல் தடுக்கப்படுகிறது.
கோவிட் பாதுகாப்பு மையங்களிலும், தனிமைபடுத்தும் மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்கள் நாள்தோறும் செய்திகளை அறிந்து கொள்ள ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சி மேக்ஸ்டர் (Magzter) இணைய செய்தி வாசிப்பு நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக டிஜிட்டல் பத்திரிக்கைகளை வழங்கியுள்ளன.
ஐ.ஐ.டி வளாகம், சென்னை வர்த்தக மையம், நந்தனம் கலைக் கல்லூரி, கே.பி பார்க், சத்யபாமா பல்கலைக்கழகம் – பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, புனித ஜோசப் பொறியியல் கல்லூரி, தங்கவேலு பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையமும், தலைமையகமுமான ரிப்பன் கட்டிடம், ஆகிய எட்டு இடங்களில் இந்த இலவச டிஜிட்டல் பத்திரிக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோவிட் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள அனைவரும், மேக்ஸ்டர் நிறுவன இணையதளத்தில் (www.magzter.com) உள்ள 5,000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை இலவச மற்றும் அளவற்ற எண்ணிக்கையில் படித்து பயன் பெற முடியும்.
தானியங்கி, வணிகம், நகைச்சுவை, பொழுதுபோக்கு, ஃபேஷன், உடல்நலம், வாழ்க்கை முறை, செய்திகள், அரசியல், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் பயணம், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பிரபல பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்களும் இந்த மேக்ஸ்டர் இணையதளத்திள் உள்ளன.
பெருநகர சென்னைமாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள மேக்ஸ்டரின் இந்த தொடுதலற்ற, தொடர்பு இல்லாத மற்றும் சுற்று சூழலுக்கு பாதிப்பற்ற சேவை தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் மன உறுதியை அதிகரிக்கும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.