கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 7500க்கும் மேற்பட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, மற்றும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, கோவிட் மையங்களில் 1219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 6074 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த 12968 பேரும், வெளியூர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த 5402 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6343 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரோனாவினால் இறந்தோர் எண்ணிக்கை 115 பேரை தாண்டியுள்ளது.
இந்நிலையில் கரோனாவினால் குமரியில் இறந்தவர்கள் அதிகமானோர் 60 வயதிற்கு மேற்பட்ட வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களே என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 வயதைக் கடந்தவர்களில் இணை நோயான உயர் ரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோய் இருந்தால் கரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் கரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிசோதனை இன்று முதல் தொடங்கியது. இதைப்போல் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் எடுக்கும்போது சளி, ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படும்.
இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளார்.