தமிழகம்

‘விடுதலை செய்யுங்கள்; அல்லது பரோலில் அனுப்புங்கள்’: தமிழக முதல்வருக்கு ராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் கடிதம்

கி.மகாராஜன்

‘தமிழக அரசின் கொள்கை முடிவின்படி ஏழு பேரையும் விடுதலை செய்யுங்கள் அல்லது தற்காலிக ஏற்பாடாக நீண்டகால பரோல் விடுமுறை வழங்குங்கள்’ எனக்கேட்டு தமிழக முதல்வருக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் சிறை கண்காணிப்பாளர் வழியாக தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நான் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 2 ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுனர் அரசியல் சாசனப் பிரிவு 163-ன் கீழ் அரசின் உதவி மற்றும் ஆலோசனையின் படி செயல்படாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளார்.

எனவே, தமிழக அரசு எங்கள் விடுதலை தொடர்பாக 9.9.2018-ல் எடுத்த கொள்கை முடிவை உறுதியாகவும், உடனடியாகவும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அனைத்து விபரங்களையும் ஆளுனருக்கு எடுத்துரைத்து ஏழு பேர் விடுதலை முடிவை மீண்டும் வலியுறுத்தி கடிதம் அனுப்ப வேண்டும். இவ்வாறே தர்மபுரி பஸ் எரிப்பு சிறைவாசிகளின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு உறுதியான நடவடிக்கை எடுத்தது.

அல்லது நாங்கள் 7 பேர் உட்பட 20 ஆண்டுகள் தண்டனை கழித்து விட்ட பல நூறு ஆயுள் சிறை கைதிகளின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 6 முதல் 2 ஆண்டுகள் வரை நீண்டகால பரோல் வழங்க சிறை விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு நிர்வாக ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இதேபோல் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கொள்கை முடிவு மீது விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக ஆளுனருக்கு தனி கடிதத்தை ரவிச்சந்திரன் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT