“கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 28-ம் தேதி விடுதலையாக இருக்கிறார்” என்று டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நேற்று தனது யூடியூப் சேனல் வழியே ஊதிவிட்ட நெருப்பு அதிமுக மற்றும் அமமுக வட்டாரத்தில் இப்போது விசாரணைப் பொருளாகி இருக்கிறது.
ஏற்கெனவே, “சசிகலா ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலையாவார்” என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் செய்திருந்தார். அப்போது, “விடுமுறை நாட்கள், நன்னடத்தை விதிகள், தண்டனைக்கு முன்பே ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்கள் இதையெல்லாம் கணக்கில் கொண்டால் கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலையாகி இருக்க வேண்டும்” என்று நமக்குப் பேட்டியளித்திருந்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அதற்கான காரணங்களையும் அடுக்கி இருந்தார்.
இந்த நிலையில் இப்போது, ஆகஸ்ட் 28-ம் தேதி சசிகலா விடுதலை நிச்சயம் எனத் தெரிவித்திருக்கும் டெல்லியின் அந்த மூத்த பத்திரிகையாளர், “சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக அரசிடமிருந்து ஆகஸ்ட் 16-ம் தேதி மதியம் இரண்டரை மணிக்கு இ-மெயில் தகவல் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல் ஒன்றும் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்கிறார்.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய சசிகலா வட்டாரத்தில் பேசினோம். “சின்னம்மா விடுதலையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என அதிமுகவில் தொடங்கி இருக்கும் அதிகார யுத்தத்தைத் தொடர்ந்து அதிமுகவினருக்கும் இப்போது கட்சி கலகலத்துவிடுமோ அச்சம் வந்து விட்டது. எனவே, அவர்களும் இப்போது சின்னம்மா விடுதலையை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படியான சூழலில் இந்த கரோனா காலத்தில் அடுத்தவருக்குத் தெரியாமல் அமைதியாக விடுதலையாகி வெளியில் வர சின்னம்மா விரும்பவில்லை. பெங்களூருவிலிருந்தே சின்னம்மாவுக்கு பிரம்மாண்ட வரவேற்புக் கொடுத்து அழைத்து வரவேண்டும். அவரது மறு வருகை தமிழக அரசியிலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் எனச் சின்னம்மாவுக்கு நெருக்கமானவர்கள் திட்டமிடுகிறார்கள்.
அவரும் அதைத்தான் விரும்புகிறார். கரோனா களேபரங்கள் எல்லாம் முடிந்தால்தான் அது சாத்தியமாகும். எனவே, இப்போதைக்கு வெளியில் வருவதை சின்னம்மாவே விரும்பமாட்டார். அநேகமாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது” என்கிறது சசிகலா வட்டாரம்.
முன்பு சசிகலா விவகாரங்களைக் கவனித்து வந்த பெங்களூரு புகழேந்தியிடம் இது குறித்துக் கேட்ட போது, “சசிகலா 28-ம் தேதி விடுதலையாவார் எனச் சொல்லும் அந்த நபர் யார்... அவரென்ன மத்திய அரசின் பவர் ஏஜென்டா? எனக்குத் தெரிந்தவரை சசிகலா விடுதலையில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அவர் சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாகப் புகார் எழுதிய சிறைத்துறை அதிகாரி ரூபா ஐபிஎஸ் \தான் இப்போது கர்நாடக உள்துறைச் செயலாளர்.
அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிந்து அதற்காக சசிகலாவுக்கு என்ன தண்டனை என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையான 10 கோடி ரூபாயும் இன்னும் செலுத்தப்படவில்லை. இத்தனை சிக்கல்கள் இருக்கும் போது இன்னும் பத்து நாளில் அவர் எப்படி விடுதலையாக முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக சிறைத் துறையிடமிருந்து எங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. வழக்கில் சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையை எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். என்றாலும் அதைச் செலுத்திய பிறகுதான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
அப்படியிருக்கையில் இந்த வழக்கோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாத நபர்கள் சசிகலா விடுதலை தொடர்பாக அவ்வப்போது எங்களுக்கே தெரியாத தகவல்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அவரது விடுதலைக்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதேநேரம், அது தொடர்பாகப் பொதுவெளியில் பகிரப்படும் எந்தவொரு தகவலாலும் அவரது விடுதலைக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம்” என்றார்.