தமிழகம்

பொது விநியோகத் திட்டத்தில் இணைய வழி சேவை: அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பொது விநியோகத் திட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து கணினி வசதிகளையும் ஒருங்கிணைத்து, இணைய வழி சேவை வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:

தமிழகத்தில் உணவு மானியத் துக்காக இந்த ஆண்டு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 522 முழுநேர கடைகள், 1,062 பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து கணினி வசதிகளையும் ஒருங்கிணைத்து, இணைய வழி சேவை வழங்கப்பட உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 825 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 12 ஆயிரத்து 978 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 1,722 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 15.10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 16 அரிசி ஆலை கள் ரூ.68.60 கோடியில் நவீன மயமாக்கப்படும். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 5,714 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 25,756 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 746 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பழமையான கிடங்குகள், நவீன அரிசி ஆலைகளில் முதல்கட்டமாக 10 கிடங்குகள், 5 ஆலைகளில் சிறப்பு மராமத்து மற்றும் பராமரிப்புப் பணிகள் ரூ.2.50 கோடியில் மேற்கொள்ளப்படும். சென்னை திருவான்மியூர், ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையம், நீலகிரி மாவட்டம் உதகை ஆகிய கிடங்குகளில் சாலைகள், சுற்றுச்சுவர் கட்டமைப்புகள் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். பட்டுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் திம்மாவரம் நவீன அரிசி ஆலைகளில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1.50 கோடியில் அமைக்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக 10 நெல் உலர்த்தும் களங்கள் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்படும். கூடுதலாக 100 நெல் தூற்றும் இயந்திரங்கள் ரூ.25 லட்சம் செலவில் வழங்கப்படும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 77 உதவியாளர்கள், துணை சேமிப்பு கிடங்கு மேலாளர்கள், 34 அலுவலக உதவியாளர்கள், 78 காவலர்கள் என 189 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT