தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய ஆதாரச் சட்டம் (IEA) போன்றவற்றில் மாற்றங்கள் செய்து, 6 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளதை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி பிரச்சார இயக்கம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கரோனா ஊரடங்கு காரணமாக இணையம் வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கம்
கரோனா தொற்றால் நாடே முடங்கியிருக்கும் காலக்கட்டத்தில், எவரும் எதிர்த்து களமாடாத சூழலைப் பயன்படுத்தி, புறவாசல் வழியாக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுடைப்படுத்த மத்திய பாஜக அரசு வேகங்காட்டி வருகின்றது.
கல்வியின் அறநெறியை தகர்த்து, கல்வியில் சமூக நீதிக்கான இடஒதுக்கீடு முறையை ஒழித்து, கல்வியை எட்டாக்கனியாக்கும் வகையில் நவீன குலக் கல்வி முறையை போதிக்கும் புதிய கல்விக் கொள்கையை பல்வேறு எதிர்ப்புகளை புறக்கணித்து மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சூழல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவை (EIA-2020) பாஜக அரசு முன்மொழிந்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய ஆதாரச் சட்டம் (IEA) போன்றவற்றில் மாற்றங்கள் செய்து, 6 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க மத்திய அரசால் கடந்த மே 04,2020 அன்று ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது
மனித உரிமைகளை ஒழித்து, அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், குற்றவியல் சட்டங்களில் அவசரகதியில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
கரோனா ஊரடங்கை பயன்படுத்தி இதுபோன்ற சட்டத்திருத்தங்களை கொண்டுவருவதை மத்திய பாஜக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை துண்டறிக்கை, போஸ்டர் பிரச்சாரங்கள், சமூக வலைதள பிரச்சாரங்கள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.