சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு பங்களாக்களை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டவிரோத கட்டிடங்களாக அறிவித்து தமிழக அரசு நோட்டீசை ஒட்டியது.
2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்த்து பங்களா உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள நான்கு பங்களாக்களை இடிக்க மாமல்லபுரம் உள்ளூர் திட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டது.
சட்டவிரோத பங்களாக்களை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு காவல்துறை மற்றும் தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் உதவி செய்யவும் அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழக அரசின் நோட்டீசை எதிர்த்து பங்களா உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.