கடந்த சில தினங்களாக சென்னையில் கரோனா தொற்று குறைய தொடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகமாகி வருவதால் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா என சோதனை செய்த பிறகே போலீஸார் அனுமதிக்கின்றனர். இடம்: அண்ணா சாலை. படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி 190 இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறை தீவிர கண்காணிப்பு

செய்திப்பிரிவு

தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 190 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ரோந்து போலீஸாரும் வலம் வந்தனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, அதில் பல தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும், கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்த விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தேவையற்ற முறையில் வீட்டைவிட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார்அகர்வால் கேட்டுக் கொண்டிருந்தார். மீறிவரும் வாகனங்களை கண்காணிக்க சென்னை முழுவதும் 190 சோதனைச் சாவடிகளை போலீஸார் அமைத்திருந்தனர்.

தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவையின்றி பொதுவெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க சில இடங்களில் தடையை மீறி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை காணமுடிந்தது.

SCROLL FOR NEXT