சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென சூரியனை சுற்றி பெரிய அளவில் ஒளி வட்டம் தெரிந்தது. அதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவ்வாறு சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படுவதை, நமது முன்னோர் ‘அகல் வட்டம்’ என்பார்கள். ‘அகல் வட்டம் -பகல்மழை’ என பழமொழியும் உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:
கோடை காலத்தில் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள் மிக உயரத்தில் செல்லும்போது பட்டக வடிவில் பனிக்கட்டி துகள்களாக மாறும். அதன் மீது படும்சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும். அதை ‘குறைந்தபட்ச ஒளி விலகல் கோணம்’ என்கிறோம்.
22 டிகிரி அளவில் ஒளி விலகல் அடையும். அப்போது சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படும். நேற்று இதுதான் நடந்திருக்கக் கூடும். இதுபோன்ற நேரங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டால் பனிக் கட்டிகள் மழையாக பெய்யும். இதுபோன்ற ஒளி வட்டம் ஏற்படும்போது, விரைவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று பொருள் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.