சென்னை வியாசர்பாடியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் திருவேங்கடம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்ப காலத்தில் அவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார்.
இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஆக.15) மாரடைப்பு ஏற்பட்டு, அவர் நள்ளிரவில் காலமானார். இது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வரை செல்போன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார்.
'மெர்சல்' திரைப்படத்தில் விஜய், 5 ரூபாய் மருத்துவராக நடித்தது திருவேங்கடத்தை முன்மாதிரியாக கொண்டதுதான் என சொல்லப்படுகிறது.
மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் இன்று (ஆக.16) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட மருத்துவர் திருவேங்கடம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற மருத்துவர் திருவேங்கடம் இலவசமாக மருத்துவம் படித்ததாகவும், அதே போன்று தனது சேவையும் இருக்க வேண்டும் என நினைத்து, வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் மருத்துவச் சேவை அளித்திட வேண்டுமென்ற உயரிய நோக்கில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர், 5 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு தனது இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர்.
தன்னுடைய சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும், மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்து மருத்துவரான திருவேங்கடம், 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கியுள்ளார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.