கனிமொழி எம்.பி: கோப்புப்படம் 
தமிழகம்

பெண்களின் திருமண வயது: பிரதமர் அறிவிப்புக்கு கனிமொழி எம்.பி. வரவேற்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினமான நேற்று (ஆக.15) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தற்போது, பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், அவர்களின் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் பரிந்துரைகளின்படி முடிவெடுக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, கனிமொழி எம்.பி. இன்று (ஆக.16) தன் ட்விட்டர் பக்கத்தில், "பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT