பாளையங்கோட்டையில் சுதந்திர தின விழா அணிவகுப்புக்கு தலைமை வகித்து, வழிநடத்திய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

தந்தை இறந்த சோகத்தை மறைத்து சுதந்திர தினவிழாவில் கம்பீர அணிவகுப்பு: நெகிழ வைத்த நெல்லை பெண் இன்ஸ்பெக்டர்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

காவல்துறை அணிவகுப்புக்கு பாளையங்கோட்டை ஆயுதபடை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை வகித்து, கம்பீரமாக வழிநடத்தினார். ஆனால், அந்நேரத்தில் அவரது மனம் பெரும்சோகத்தில் மூழ்கியிருந்தது. அதை அவர் துளியும் வெளிக்காட்டவில்லை.

இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி

அவரது 83 வயது தந்தை நாராயணசுவாமி நேற்று முன்தினம் (14-ம் தேதி) இரவு உடல்நலக்குறைவால் காலமானார். இறுதிச் சடங்கில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு செல்ல வேண்டும். ஆனால், சுதந்திர தினவிழாவில் காவல்துறை அணிவகுப்பை வழி நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருந்தது. ஒருவார காலம் பயிற்சி எடுத்திருந்த நிலையில், திடீரென வேறு நபரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை.

எனவே, மிகப்பெரிய சோகத்தை தன்னுள் மறைத்துக்கொண்டு, காவல்துறை அணிவகுப்பை சிறப்பாக வழிநடத்தினார். விழா நிறைவடைந்த பின்னர், தந்தையை நினைத்து அவரது கண்கள் கலங்கின. அதைப்பார்த்த மற்றவர்களும் விவரமறிந்து கண்கலங்கினர். தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த மகேஸ்வரி திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். விழாவில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பிவைத்தனர்.

SCROLL FOR NEXT