தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தூய்மைப் பணியாளரை தேசியக் கொடி ஏற்றவைத்து கவுரவப்படுத்திய அரசுப் பள்ளியின் தலைமையாசிரியரை பலரும் பாராட்டினர்.
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் சாரதி, என்.சி.சி. ஆசிரியர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில், கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ரமா,ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் சாரதி, தூய்மைப் பணியாளர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்ததுடன், தூய்மைப் பணியாளர் ரமாவைக் கொண்டு தேசியக் கொடியை ஏற்றவைத்து கவுரவித்தார். இதை சற்றும் எதிர்பாராத ரமா, மகிழ்ச்சியுடன் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, இத்தகைய வாய்ப்பை அளித்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமையாசிரியர் சாரதி கூறியபோது, “கரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களுக்கு நிகரானவர்களான தூய்மைப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் ஓயாது உழைத்து வருகின்றனர். அவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களில் ஒருவரை வைத்து தேசியக் கொடியை ஏற்றச் செய்தோம். இது, அவர்களை கவுரவப்படுத்த எங்கள் பள்ளிக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு” என்றார்.