தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மேற்குவங்கம் மற்றும் ஒடிசா, வடக்குஆந்திரா கடலோரப் பகுதி களுக்கு, மீனவர்கள் அடுத்தஇரு நாட்களுக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT