தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கூடாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசை எதிர்த்து சமூகநீதி சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உண்டு என்று பலமுறை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. அரசமைப்புச் சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆட்சி சமூக அநீதியை நோக்கிச் செல்கிறது. இதை எதிர்த்து சமூகநீதி சக்திகள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும். சமூகநீதி மீண்டும் இருண்ட காலத்தை நோக்கிச் செல்லாமல் தடுக்க வேண்டிய மகத்தான கடமை அனைத்து சமூகநீதி சக்திகளுக்கும் இருக்கிறது'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்
நரபலி குறித்து விசாரணை
கி.வீரமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘கிரானைட் கொள்ளை சம்பந்தமான ஊழலை வெளிக் கொண்டுவர ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. சிறப்பாக பணியாற்றும் சகாயத்தை மக்கள் பாராட்டுகின்றனர். நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் தோண்டியபோது குழந்தை மற்றும் பெரியவர்களின் உடல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி தனியாக நீதிபதியின் மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.