தமிழகம்

முகூர்த்த நாட்கள் என்பதால் ஆகஸ்ட் 23, 30-ல் முழு ஊரடங்கை தளர்த்தக் கோரி வழக்கு

செய்திப்பிரிவு

ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளும் முகூர்த்த நாட்கள் என்பதால் அன்றைய நாட்களில் முழு ஊரடங்கை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆக.23 மற்றும் ஆக.30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகள் முகூர்த்த தினம் என்பதால் அன்றைய தினங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு நிகழ்வுகளும், விமானங்களும் தடையின்றி இயங்கி வரும்போது முழு ஊரடங்கு என்ற பெயரில் பொதுமக்களை மட்டும் தடுக்கக்கூடாது.

அதேபோல ஆகஸ்ட் 21, 24, 28, 31, செப்டம்பர் 4, 14 மற்றும் 16 ஆகிய நாட்கள் முகூர்த்த நாட்கள் என்பதால் அதிகப்படியான திருமணங்கள் நடைபெறவுள்ளன. இந்த நாட்களில் ஊரடங்கை கடைபிடித்தால் திருமண நிகழ்வுகள் நல்லவிதமாக நடைபெற ஊரடங்கு இடையூறாக அமையும்.

பொது போக்குவரத்தை தொடங்கும் வரை வரை தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கி அரசுப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆகஸ்ட் 23, 30 மற்றும் ஆகஸ்ட் 24, 31 ஆகிய தினங்களில் போக்குவரத்து, உணவு, போட்டோ, வீடியோ, அலங்காரம், உள்ளிட்ட திருமண ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் சிறப்பு முன் அனுமதி வழங்கி முழுமையாக செயல்பட உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT