தமிழகம்

'இந்தியாவின் அடுத்த தலைவர் ஜெகன்மோகன்'- மதுரையிலும் மையம் கொண்ட ஒய்எஸ்ஆர்.ஆர்மி!

குள.சண்முகசுந்தரம்

ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற நாள் முதலே பல அதிரடிகளைச் செய்து தெலுங்கு தேசத்தையும் கடந்து தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை வசீகரித்து வருகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அந்த வகையில், ’டி.என் - ஒய்.எஸ்.ஆர் சி.பி. ஃபாலோயர்ஸ் (தமிழ்நாடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பார்ட்டி ஃபாலோயர்ஸ்)’ என்ற பெயரில் தமிழகத்திலும் ‘ஜெகன்மோகன் ஆர்மி’க்கு ஆள்திரட்டி வருகிறார்கள்.

தமிழகத்தின் அரசியல் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரையின் முக்கியப் பகுதிகளில் திடீரெனச் சுவர் விளம்பரங்களில் பளிச்சிடுகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அதுவும் சும்மா இல்லை... ‘இந்தியாவின் சிறந்த தலைவர்... இந்தியாவின் அடுத்த தலைவர்’ என்ற வாசகங்களுடன்!

பிரம்மாண்டமாய் எழுதப்பட்டு வரும் இந்த சுவர் விளம்பரங்கள் குறித்து நம்மிடம் பேசினார், ‘டி.என் - ஒய்.எஸ்.ஆர் சி.பி. ஃபாலோயர்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.கல்யாண். “ஜெகன் சார் இந்திய அரசியலுக்கு ஒரு நல்ல மாற்றத்துக்கான பாதையைக் காட்டிவருகிறார். அவருடைய தொலைநோக்குப் பார்வையும் அணுகுவதற்கு எளிமையான பண்பும் ஆந்திர எல்லையைக் கடந்து அனைவருக்கும் பிடித்திருக்கிறது. குறிப்பாக, எங்களைப் போன்ற இளைஞர்கள் ஜெகன் சாரால் தானாகவே ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். நானும் அப்படி ஈர்க்கப்பட்டவன்தான்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஆனால், ஜெகன் சாரைப் போன்ற அரசியல் தலைவர்கள் இன்னும் பலர் இந்த தேசத்துக்குத் தேவை என நினைக்கிறேன். இன்றைக்கு அவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. சொல்ல முடியாது... அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியேகூட அவரைப் பிரதமர் வேட்பாளராக பிரகடனம் செய்யலாம். அதற்காக அதுவே நடந்துவிடும் என்று நான் சொல்லவில்லை.

தமிழகத்தில் நாங்கள் ‘டி.என் - ஒய்.எஸ்.ஆர் சி.பி. ஃபாலோயர்ஸ்’ அமைப்பை ஆரம்பித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. முகநூலில் இதைப் பார்த்துவிட்டுப் பலரும் தன்னெழுச்சியாகவே எங்களைப் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை 2,500 பேர் வரைக்கும் எங்களோடு இணைந்திருக்கிறார்கள். இதில் ஐம்பது, அறுபது பேர் மட்டும்தான் வயதானவர்கள். மற்ற அனைவருமே இளைஞர்கள். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிறையப் பேர் எங்களைப் பின் தொடர்கிறார்கள்.

கே.கல்யாண்

ஜெகன் சாரைச் சந்திக்க அவரது முதன்மைச் செயலாளர் வெங்கடரெட்டியிடம் நேரம் ஒதுக்கக் கேட்டிருக்கிறோம். எங்களது செயல்பாடுகளை முகநூல் வழியே பார்த்த அவர், ஜெகன் சாரை விரைவில் சந்திக்க வைப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜெகன் சார் தலைமையில் ஆந்திரம் இன்றைக்கு எப்படி முன்னோடி மாநிலமாக மாறிவருகிறதோ அதுபோல தமிழகமும் ஏன்... ஒட்டுமொத்த இந்தியாவும் மாற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். அதற்கான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் விதமாக மதுரையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அமைதி நடைப்பயணம் ஒன்றை நடத்தவிருக்கிறோம்.

இந்த பயணத்தில் ஆந்திர அரசியல் தலைவர்கள், தெலுங்கு திரை நடிகர்கள் உள்ளிட்டோரையும் பங்கெடுக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறோம். டிசம்பர் 21-ம் தேதி ஜெகன் சாருக்குப் பிறந்த நாள். அநேகமாக அதே நாளில்கூட அந்த அமைதி நடைபயணம் இருக்கலாம்” என்கிறார் கல்யாண்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

SCROLL FOR NEXT