கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களான நல்வழித்துறை அலுவலர்கள், ஊழியர்களை கவுரவித்து பரிசளித்த அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான். படங்கள்: வீ.தமிழன்பன் 
தமிழகம்

காரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில் அமைச்சர் ஷாஜகான் பேச்சு

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டம் முழுவதும் இயற்கை எனப்படும் அங்கக வேளாண்மை முறையின் கீழ் கொண்டு வரப்படும் என புதுச்சேரி வருவாய் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் தமது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் கடற்கரைச் சாலையில் நாட்டின் 74- வது சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி வருவாய் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு அவர் பேசியதாவது:

அங்கக வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கில் ”பரம்பரகாத் கிருஷி விகாஸ் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் தலா 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட 8 தொகுப்புகள் காரைக்கால் மாவட்டத்தில் உருவாக்கப்படும். இயற்கை அங்கக வேளாண்மைக்கு மாறும் விவசாயிகளை ஊக்கப்படுத்த ஹெக்டேருக்கு முதல் ஆண்டில் ரூ.12 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ.10 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.9 ஆயிரம் இடுபொருள் மானியமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்தக் குழுக்கள் சாகுபடி செய்யும் இயற்கை வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்த ஏதுவாக அங்கக சான்றளிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் அங்கக வேளாண்மை முறையின் கீழ் கொண்டு வரப்படும்.

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்ட மேல் படிப்பு 2020-21 ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி பல்கலைக்கழக அனுமதியுடன் தொடங்கப்படுகிறது.

நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் காரைக்கால் கால்நடைத் துறைக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. காரைக்கால் மத்தியக் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் ரூ.3 கோடி செலவில் நவீன அரிசி அரவை ஆலை நிறுவப்படவுள்ளது. ஹட்கோ நிதியுதவியில் ரூ.3.50 கோடி மதிப்பில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதிதாக வெளிப்புற நோயாளிகள் கூடம், பதிவு அறை கட்டப்படவுள்ளது’’.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியதையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு பள்ளிப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள், சிறந்த காவலர்கள், கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகச் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளைச் சார்ந்தோர், தியாகிகள் விழாவில் கவுரவிக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலை நிகழ்ச்சிகள், வாகன அணிவகுப்புகள் உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் வீரவல்லபன், ரகுநாயகம், தியாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தனிமனித இடைவெளியுடன், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT