நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை கன மழை பெய்தது. உதகை, குந்தா தாலுகாக்களில் காய்கறிப் பயிர்களும், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் நெல், வாழைகளும் வெள்ளத்தில் மூழ்கின.
உதகை அருகே எமரால்டு, முத் தொரை பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு, கல்லக்கொரை ஆடா, கேத்தி பாலாடா பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இந்நிலையில் எஞ்சிய காய்கறிகளை காப்பாற்றஅவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கரோனா பாதிப்புகாரணமாக வெளி மாவட்டங்களுக்கு காய்கறிகளை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது. தற்போது பெய்த கன மழையால், பயிர்கள் சேதமடைந்துள்ளன. எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன. முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.8 தான் விலை கிடைக்கிறது. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சேதமடைந்த விளை பயிர்கள் குறித்தகணக்கெடுப்பு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். அரசு நிர்ணயிக்கும் நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்’ என்றனர்.