கோப்புப்படம்

 
தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையில் இருந்து 5,700 சிறப்பு பேருந்துகள்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் மொத்தம் 5,710 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழன்) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்லும் மக்களுக்காக தமிழக அரசு சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 9-ம் தேதி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் 1.22 லட்சம் பேர், 10-ம் தேதி 2,804 பேருந்துகளில் 1.26 லட்சம் பேர், 11-ம் தேதி 2,760 பேருந்துகளில் 1.11 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி 3 நாட்களில் மொத்தம் 8,270 பேருந்துகள் இயக்கப்பட்டு, 3.58 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், தனியார் அலுவலக பணியாளர்கள் என பெரும்பாலானோர் இன்றும், நாளையும் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, இன்று (ஜன.13) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,790 பேருந்துகள் என மொத்தம் 4,882 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, நாளை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2,920 பேருந்துகள் என மொத்தம் 5,012 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுவரை 2.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT