மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட மக்கள். படம் : இரா.நாகராஜன். 
தமிழகம்

மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியல்

செய்திப்பிரிவு

பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிகாபுரம் ஊராட்சி. எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊராட்சியில் உள்ளமயான நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஊராட்சி தலைவர் லட்சுமியின் கணவர் முரளி உடந்தையாக இருப்பதாகவும்,இதுகுறித்து கேட்ட பொதுமக்களுக்கு முரளி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கன்னிகாபுரம் மயான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று கன்னிகாபுரம், செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த வெங்கல் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தினர். அப்போது அவர்கள், மயானம் ஆக்கிரமிப்பு குறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். ஆகவே, சுமார் அரை மணி நேரம் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT