வந்தே பாரத் திட்டம் தொடங்கிய 100 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 118 விமானங்களை கையாண்டு திருச்சி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவைரஸ் வேகமாக பரவத் தொடங்கியபோது, பல்வேறு நாடுகளிலும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பணி, உணவு இன்றியும், அச்சத்திலும் தவித்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘வந்தே பாரத்’ திட்டம் என்ற பெயரில் அயல்நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டம் தொடங்கி நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து ஏறத்தாழ 10.50 லட்சம் பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் அரசு விமானங்களில் மட்டும் 3,28,362 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் (53 சேவைகள்) மூலம் சிங்கப்பூர் 2,664, கோலாலம்பூர் 1,763, ஷார்ஜா 1,590, அபுதாபி 1,036, துபாய் 705, தோஹா 640, ஜெட்டா 305, மஸ்கட் 181, ரியாத் 170, தமாம் 140 என 9,194 பேர் திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த 100 நாட்களில் வந்துள்ளனர். இதுதவிர 65 தனியார் விமானங்களில் வந்தவர்களையும் சேர்த்து கடந்த 100 நாட்களில் 19,490 பேர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து வான் போக்குவரத்து ஆர்வலர் உபயதுல்லா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, “வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 15 விமானங்கள் மூலம் 2,664 பேரை திருச்சிக்கு அழைத்துவந்துள்ளது. கரோனா அச்சத்திலும், இந்தியாவின் 2-ம் நிலை நகரங்கள் அளவில் அதிக விமானங்களை (118 விமானங்கள்) பாதுகாப்புடன் திருச்சி விமான நிலையம் கையாண்டுள்ளது பாராட்டுக்குரியது” என்றார்.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த மைதிலி என்பவர் கூறியபோது, “மார்ச் மாதம் நான் சிங்கப்பூரில் பணியில் இருந்தேன். என் மகன் மற்றும் தாய் ஆகியோர் சிங்கப்பூர் வந்திருந்த நிலையில், மார்ச் 3-வது வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலரும் வேலை இல்லாமலும், மருத்துவ உதவிக்கும் கஷ்டப்பட்ட நிலையில், மத்திய அரசு விமானத்தை இயக்கியதால் நலமாக ஊர் வந்து சேர்ந்தோம்” என்றார்.