பேருந்து வசதி இல்லாத வயலூர் கிராமத்துக்குச் செல்லும் சாலை. 
தமிழகம்

பேருந்து வசதிக்கு காத்திருக்கும் கிராம மக்கள்

செய்திப்பிரிவு

சுதந்திரம் பெற்று 74-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் நிலையில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதிகிடைக்காதா என்று காத்துக் கொண்டுள்ளனர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான வயலூர் கிராம மக்கள்.

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஆற்பாக்கம் கூட்டுச் சாலையில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள வயலூர் கிராமம், காவாந்தண்டலம் ஊராட்சியின்கீழ் வருகிறது. இங்கு விவசாயத்தை தொழிலாகக் கொண்ட 105 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால், வெளியூருக்கு செல்ல 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்பாக்கம் கூட்டுச் சாலைக்கு வந்துதான் வாகனங்களை பிடிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் கல்வி கற்க சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள ஆற்பாக்கத்துக்கும், ரேஷன் பொருட்களை வாங்க 5 கி.மீ. தொலைவில் உள்ள காவாந்தண்டலம் கிராமத்துக்கும் சென்றுவர வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள், தங்கள் கிராமத்தின் வழியாக ஒரு பேருந்து இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இன்றுவரை நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்களிடம் கேட்டபோது, “நம்நாடு சுதந்திரம் பெற்று 74-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறோம். ஆரம்பப் பள்ளி மட்டுமே எங்கள் கிராமத்தில் உள்ளது. உயர்கல்விக்கு நாங்கள் 6 கி.மீ. நடந்தே செல்ல வேண்டியுள்ளது. மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு கூட எங்கள் கிராமத்தில் வசதி இல்லை. எங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய தரமான சாலைகள் எங்கள் கிராமத்தில் உள்ளன” என்றனர்.

SCROLL FOR NEXT