சென்னையில் கரோனா வைரஸ்பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபரின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள், வெளி நாடுகள், வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்து வருவோர், கரோனா பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்ட நிலையில், முடிவுக்காக காத்திருப்பவர்கள் உள்ளிட்டோர்வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னைமாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 17 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி நிலவரப்படி 17 லட்சத்து 31 ஆயிரத்து 851 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
களப்பணியாளர்களின் பணி...
இவர்களில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 146 பேர் தனிமையில் இருக்கும் காலத்தை முடித்துள்ளனர். தற்போது 3 லட்சத்து 34 ஆயிரத்து 792 பேர் தனிமையில் உள்ளனர். மாநகராட்சியின் குழு முயற்சியால், இவ்வளவு பேரை,இடையூறு ஏதும் இன்றி தனிமைப்படுத்த முடிந்துள்ளது. இதில் களப்பணியாளர்களின் பணி பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.