தமிழகம்

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு நீர் திறக்காவிட்டால் வணிகர்களுடன் இணைந்து போராட்டம்: விவசாயிகள் முடிவு

இ.ஜெகநாதன்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு பெரியாறுநீர் திறக்கும்போதே, சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்காவிட்டால் வணிகர்களுடன் இணைந்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகே சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக திறந்ததால் பல கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து ‘சிவகங்கை மாவட்டம் பெரியாறு பாசன பகுதிகளுக்கு தனியாக செயற்பொறியாளர் அலுவலகத்தை அமைத்து சிவகங்கை மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இந்தாண்டு மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்,’ என ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து திருமலை விவசாயி அய்யனார் கூறுகையில், "வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு பெரியாறுநீர் திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்க வேண்டும். ஆனால் இதுவரை தண்ணீர் திறக்கவில்லை.

மேலும் மதுரை மாவட்டத்தில் விதிமுறையை மீறி விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்கின்றனர்.

அதிகாரிகள் தண்ணீரை விலைக்கு விற்பதால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஒருபோகத்திற்கே கையேந்தும் நிலை உள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT