தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் ரூ.58 ஆயிரத்து 663.81கோடியாக அதிகரித்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஆக.14) )நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன் அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 6,459 பேருக்கு ரூ.23.01கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.சி.வீரமணி ஆகியோர் வழங்கினர்.
அப்போது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, "வேலூர் மண்டலத்தில் நடப்பாண்டில் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 19 ஆயிரத்து 753 பேருக்கு ரூ.126.50 கோடி வட்டியில்லாத பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர் இழப்பீடாக கடந்த ஜூலை 31-ம் தேதி வரை ரூ.8,199.85 கோடியும் வேலூர் மண்டலத்தில் ரூ.54.12 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறு வணிக கடன் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 14) ரூ.58 ஆயிரத்து 663.81 கோடியாக உயர்ந்துள்ளது.
மாநில அளவில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி 6.36 லட்சம் பேருக்கும் வேலூர் மண்டத்தில் 14 ஆயிரத்து 188 பேருக்கு ரூபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடியில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் தொடங்கப்பட உள்ள நகரும் நியாய விலைக் கடைகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 109 கடைகள் தொடங்கப்பட உள்ளன.
கரோான ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், கட்டுநருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.6.13 கோடியை வழங்கி அரசு அனுமதியளித்துள்ளது" என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லாத பயிர்க் கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதில், ரூ.9,323 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. விவசாயிகள் ஆர்வத்துடன் பயிர் செய்து வருகின்றனர். அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ரூ.2,500 கோடி அளவுக்குப் பணம் உள்ளது. நபார்டு வங்கி ரூ.2700 கோடி வழங்கியுள்ளது. ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று நபார்டு வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கூட்டுறவுத் துறையில் மோசடி தொடர்பாக யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.