தமிழகம்

உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான திமுக எம்எல்ஏக்கள் வழக்கு: தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு வாத பிரதிவாதத்தை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மூன்றாவது நாளாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, உரிமைக் குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, “குட்கா பொருட்கள் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக கூறி அதை சபையில் காட்டியதாக திமுக வாதிட்டுள்ளது. அது தடை செய்யப்பட்ட பொருள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதனால், தடை செய்யப்பட்ட பொருளை வாங்கி, சபையில் காட்டியது உரிமை மீறலா? இல்லையா? என்பதை தான் பார்க்க வேண்டும், சபையின் கண்ணியத்தை காக்கவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”. எனக் குறிப்பிட்டார்.

இந்த வாதங்களுக்கு பதிலளித்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாதிடுகையில், “ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் திமுக மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார். சபாநாயகரின் அனுமதி பெற்றே ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பினார். மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை.

2017 மார்ச் முதல் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும், 2017 பிப்ரவரி 18-ம் தேதியே 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும், தற்போதும் பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு” என திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து திமுக எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையில், 2017 பிப்ரவரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கவும், ஆளுநரின் செயலாளர் தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரி 2017-ல் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT