இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் தேசிய கொடியுடன் முற்றுகையிட்டனர். 
தமிழகம்

இளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி தேசியக் கொடியுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

எஸ்.கோமதி விநாயகம்

இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் தேசிய கொடியுடன் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு தலைமையில் ஏராளமானோர் தேசிய கொடியுடன் வந்து முற்றுகையிட்டனர்.

இதில், மாநில பொது செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இயற்கை விவசாய சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி, மாநில இணைய தள அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களுக்கு சுதந்திர வழங்கி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றித்துடன் இணைக்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 வருவாய் கிராமங்கள் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துடன் உள்ளது.

ஆனால், மற்ற அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியுடன் இணைக்கப்பட்டு விட்டன. எனவே, கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த கடந்த 2008-ம் ஆண்டு இளையரசனேந்தல் பிர்கா தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

அப்போது சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து கோவில்பட்டி வட்டத்துக்கு அனைத்து மாற்றப்பட்டு விட்டன. இதே போல் மற்ற துறைகளும் மாற்றப்பட்டன.

உள்ளாட்சித்துறை மட்டும் மாற்றப்பட்டவில்லை. இதனால், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலேயே உள்ளன.

இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகள் கோவில்பட்டியை சுற்றி 12 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால், 35 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.

இதுகுறித்து ஏராளமான மனுக்கள் அளித்தும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. எனவே, அரசு துரித நடவடிக்கை இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.

SCROLL FOR NEXT