தமிழகம்

அறுந்துவிழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டிவைத்துவிட்டு 7 ஆண்டுகளாக மறந்துபோன மின்வாரியம்: காட்சிப் பொருளாக மாறிய மின்மாற்றி

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து அறுந்துவிழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டி வைத்துவிட்டு 7 ஆண்டுகளாகியும் சரி செய்யவில்லை.

இதனால் டிரான்ஸ்ஃபார்மர் காட்சிப்பொருளாக மாறியுள்ளது.

காளையார்கோவில் அருகே சேதாம்பல் ஊராட்சி பொத்தகுடி 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்திற்கு சிரமம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அக்கிராமத்திற்கு குறை மின்னழுத்தமே வருவதால் மோட்டார், கிரைண்டர், மிக்சி போன்ற மின் உபயோகப் பொருட்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு முன்பு, பொத்தகுடியில் புதிதாக டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டது.

இந்த டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து மின் விநியோகம் செய்த இரண்டாவது நாளிலேயே அதன் அருகேயுள்ள ஒரு மின்கம்பத்தில் தனியார் ஒருவரின் ஜேசிபி இயந்திரம் மோதியது. இதனால் மின்கம்பம் சேதமடைந்து கீழே சாய்ந்தது.

இதையடுத்து மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அறுந்துவிழுந்த மின்கம்பியை அருகேயுள்ள மரத்தில் மின் ஊழியர்கள் கட்டி வைத்தனர். அதன்பிறகு 7 ஆண்டுகளாக சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யவும் இல்லை, மின் இணைப்பும் கொடுக்கவில்லை. இதனால் பொத்தகுடி கிராமமக்கள் தொடர்ந்து குறை மின்னழுத்தத்தால் சிரமமடைந்து வருகின்றனர்.

குருவிக்காக 45 நாட்கள் தெருவிளக்குகள் எரியவிடாமல் இருளில் வாழ்ந்த பொத்தகுடி கிராமமக்களை மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாதது சமூகஆர்வலர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘ மின்கம்பத்தை ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்தியபோதே, மின்வாரிய ஊழியர்கள் அபராதமும் வசூலித்துவிட்டனர். அதன்பிறகும் 7 ஆண்டுகளாக மின்கம்பத்தை சரிசெய்து மின் விநியோகம் செய்யாதது வேதனை அளிக்கிறது. வேறு இடங்களில் பழுதடைந்தால் இங்குள்ள டிரான்ஸ்ஃபார்மரை அடிக்கடி எடுத்துச் செல்கின்றனர்.

பிறகு அங்கு சரியானதும், இங்கு கொண்டு வந்து வைக்கின்றனர். ஆனால் எங்களுக்கு மட்டும் மின் இணைப்பைக் கொடுக்க மறுக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை, என்று கூறினர்.

இதுகுறித்து மின்வாரியப் செயற்பொறியாளர் கூறுகையில், ‘பொத்தகுடியில் டிரான்ஸ்பார்ம் பழுதானது குறித்து எனக்கு தகவல் தெரியவில்லை. விசாரித்து விரைவில் சரிசெய்யப்படும்,’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT