தமிழகம்

பட்டாசு ஆலையில் பணியாற்றிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் 24 பேர் மீட்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் அருகே இயங்கும் பட்டாசு ஆலை ஒன்றில் சட்ட விரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 9 பேர், 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 15 பேர் என மொத்தம் 24 பேர் இன்று பிற்பகல் அதிரடியாக மீட்கப்பட்டனர்.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாலும், பெற்றோருக்கு வேலையின்மை, குடும்ப வறுமை காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களில் சட்ட விரோதமாக சிறுவர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படு வருவதாக புகார்கள் எழுந்தன.

அதையடுத்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.ஆர். நகர் அருகே உள்ள தியாகராஜபுரம் பகுதியில் காட்டுக்குள் இயங்கி வரும் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ரீட்டா பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து, அக்குறிப்பிட்ட பட்டாசு ஆலையில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சித்ரா, உதவி இயக்குநர் வெங்கடேஷ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, சைல்டு லைன் நிர்வாகிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகி கலா மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததும், பட்டாசு தயாரிப்பில் குழந்தை் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்களை ஆலை நிர்வாகம் ஈடுபடுத்தியதும் தெரியவந்து.

அதையடுத்து, அங்கு பணியாற்றிக்கொண்டிரு்த 9 குழந்தைத் தொழிலாளர்களும், 15 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வயது சான்று பெறப்பட்டது. பின்னர், அக்குழந்தைகள் அனைவரும் விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய பட்டாசு ஆலை நிர்வாகத்திற்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு, காவல்துறை மூலம் வழக்குப் பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT